மிசோரம் மாநிலத்தில் அடைக்கலம் புகுந்துள்ள, மியான்மர் இராணுவ வீரர்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது. 276 மியான்மர் இராணுவ வீரர்களை, இந்திய விமானப்படை விமானங்கள் மூலம், சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
நமது அண்டை நாடான மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இராணுவத்தை எதிர்த்து பல்வேறு ஆயுத குழுக்கள் சண்டையிட்டு வருகின்றனர். இதனால், இராணுவத்துக்கும் ஆயுதக் குழுக்களும் இடையே உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது.
தற்போது போர் தீவிரமடைந்திருக்கும் சூழலில், அந்நாட்டு இராணுவ வீரர்கள் எல்லை தாண்டி வந்து இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். அதோடு, மியான்மர் இராணுவத்தினர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சில ஆயுதக் குழுக்களும் எல்லை தாண்டி வந்து மிசோராம் மாநிலத்தில் தஞ்சமடைகின்றனர்.
மிசோரமில், இராணுவ வீரர்கள் தங்கி இருந்த முகாமை ஆயுதக்குழு கைப்பற்றி இருக்கிறது. எனவே, அம்முகாமில் இருந்த 600 இராணுவ வீரர்கள் எல்லை தாண்டி வந்து மிசோராம் மாநிலத்தின் லாங்ட்லாய் மாவட்டத்தில் அடைக்கலம் புகுந்தனர். இவர்கள் அசாம் ரைபிள்ஸ் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து, மிசோராம் மாநிலத்தில் நிலவும் சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், முதல்வர் லால்து ஹோமா ஆலோசனை நடத்தினார்.
பின்னர், மியான்மர் இராணுவ வீரர்களை பத்திரமாக அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடடிவக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, இன்றும், நாளையும் 276 மியான்மர் இராணுவ வீரர்கள், இந்திய விமானப்படை விமானங்கள் மூலம், சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். மீதமுள்ள மியான்மர் இராணுவ வீரர்களும் விரைவில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.