அயோத்தியில் ராமர் கோவிலில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இருந்தபடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரலையாக பார்த்தார்.
தமிழகம் வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்குச் சென்று சுத்தம் செய்து வழிபாடு மேற்கொண்டார்.
அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ள பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனை, கம்ப ராமாயண உபன்யாசம் மற்றும் ‘பஞ்சரத்ன கீர்த்தனை’ ஆகிய நிகழ்வுகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
முன்னதாக எல்.இ.டி திரை மூலம் அயோத்தியில் நடைபெறும் விழாவை நேரலை செய்ய முன்னரே அனுமதி பெறவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறை அந்த எல்.இ.டி திரையை அகற்றினர்.
இதனைத் தொடர்ந்து கோவில்களில் அயோத்தி விழாவை நேரலை செய்ய எந்த அனுமதியும் தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மீண்டும் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டு ராமர் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வானது நேரலை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தியாகராஜர், சதாசிவ பிரம்மேந்திரர், அருணாச்சல கவி, பத்ராசல ராமதாசு, அன்னமாச்சார்யா மற்றும் புரந்தர தாசர் உள்ளிட்ட கலைஞர்களின் கீர்த்தனைகளும், சிலப்பதிகாரம் காவியத்தின் வசனங்களும் பாடப்பட்டன.
அயோத்தியைப் போலவே காஞ்சிபுரமும் ஏழு ‘மோட்ச நகரங்களில்’ ஒன்றாகக் கருதப்படுகிறது. காஞ்சிபுரத்திற்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு பிரம்மாண்ட புராணம் மற்றும் கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.