தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக, சோழிங்கநல்லூர் தொகுதி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 6 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரத்து 34 வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர். இதில், 3 கோடியே 14 இலட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்களும், 3 கோடியே 3 இலட்சத்து 96 ஆயிரத்து 330 ஆண் வாக்காளர்களும், 8 ஆயிரத்து 294 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 6 இலட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 இலட்சத்து 30 ஆயிரத்து 522 ஆண் வாக்காளர்களும், 3 இலட்சத்து 29 ஆயிரத்து 793 பெண் வாக்காளர்களும், 114 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4 இலட்சத்து 62 ஆயிரத்து 612 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியில் 1 இலட்சத்து 72 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 84 ஆயிரத்து 702 ஆண் வாக்காளர்களும், 87 ஆயிரத்து 435 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 3 வாக்காளர்களும் உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் 1 இலட்சத்து 72 ஆயிரத்து 624 வாக்காளர்கள் உள்ளனர்.