75-வது குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெற உள்ள விமானப்படையின் வாகனத்தில், பெண் போர் விமானி அனன்யா சர்மா இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற 26-ஆம் தேதி நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசு சார்பில், குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
குடியரசு தினத்தன்று, டெல்லி கடமைப்பாதையில் வீரர்கள் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சக துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, மோட்டார் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் இடம்பெற உள்ள விமானப்படையின் வாகனத்தில், பெண் போர் விமானி அனன்யா சர்மா இடம் பெற உள்ளார்.
கடந்த 2021-ல் போர் விமானிக்கான பயிற்சியில் அனன்யா சர்மா இணைந்தார். இவருடைய தந்தை மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார். இவர் 1989-ஆம் ஆண்டு முதல் இந்திய போர் விமானப்படையின் விமானியாக உள்ளார். இவரை பார்த்து வளர்ந்த அனன்யா சர்மா, தந்தையை போல விமானியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
கடந்த 2022-ல், 20 பெண்கள் இந்திய விமானப்படையில் போர் விமானிகளாக பணியில் சேர்ந்தபோது, அனன்யா சர்மாவுக்கும் விமானியாகும் வாய்ப்பு கிடைத்தது.
இந்திய விமானப்படையின் சுகோய் ரக போர் விமானங்களை அனன்யா சர்மா இயக்கி வருகிறார். வரும் 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பின் போது, விமானப்படை வாகனத்தில் விமானி அனன்யா சர்மா இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.