பாஜகவை பார்த்தும், பாரதப் பிரதமர் மோடி அவர்களை நினைத்தும், திமுகவிற்கு திகிலாக இருக்கிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐந்நூறு ஆண்டுகால பொறுமையும் தவமும், 120 ஆண்டுகளுக்கு மேலான சட்ட போராட்டமும், முடிவுக்கு வந்த இந்நாள் பாரத தேசத்தின் பொன்னாள். இதோ இன்று பாரத தேசம் முழுவதும் தீபாவளி பண்டிகை போல குதூகலத்துடன் குழந்தை ராமரை மொத்த பாரதமும், இனம் பிரிவு பாகுபாடு ஏதும் இன்றி வணங்கி வரவேற்கிறது.
சுதந்திரம் பெற்ற காலம் முதல், நம் நாட்டின் தீராத தலைவலியாக திட்டமிட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருந்த ஏராளமான பிரச்சனைகள் எல்லாம் நம் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களால் ஒவ்வொன்றாக மிக நேர்த்தியாக முடித்து வைக்கப்படுகிறது.
அந்த வகையிலே அயோத்தி ராமர் கோவில் சிக்கல் என்பது தீர்க்கப்படவே முடியாத ஒரு பதட்டமிக்க நல்லிணக்க பிரச்சினையாக பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலே அமைதியான தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. சட்டப்படி தர்மப்படி அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலுடன் இன்று நம் பண்பாடும் கலாச்சாரமும் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.
1528 ஆம் ஆண்டு முகலாய பாபரின் தளபதியாக இருந்த மிர்-பாக்கி, அயோத்தியாவை வெற்றி கொண்டதன் அடையாளமாக அங்கிருந்த புனிதமான கோவிலை இடித்து விட்டு, தன் வெற்றியின் அடையாள சின்னத்தை அங்கே உருவாக்கிச் சென்ற நாள் முதல், பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்த மீட்பு நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது.
இந்த அற்புதமான குழந்தை ராமர் ஆலயத்தை, மொத்த உலக நாடுகளும் வியந்து பார்க்கும்படி, மிக நேர்த்தியாக இன்று பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்திருக்கும் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை எத்துனை பாராட்டினாலும் தகும்.
அயோத்தியில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பேசிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது உரையில் பல நூற்றாண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு, நமது ராமர் வந்துவிட்டார்.
பல நூற்றாண்டு கால பொறுமை, எண்ணிலடங்கா பலிதானங்கள், தியாகம் மற்றும் தவத்திற்கு பிறகு, நமது ராமபிரபு வந்துவிட்டார் என்று பெருமிதத்துடன் தனது உரையை தொடங்கினார்.
பாரதத்தின் அரசியலமைப்பின் முதல் பதிப்பில் பகவான் ராமரும் ஒரு அரசர் தான் என்றும் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபிறகு ராமர் இருந்தார் என்பது குறித்த சட்ட போராட்டங்கள் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தன என்று குறிப்பிட்ட நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள், நீதியின் மாண்பை காத்த நீதிபதிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் தனுஷ்கோடியில் உள்ள ராமர் சேது பாலத்தின் ஆரம்ப பகுதியான அரிச்சல்முனைக்கு சென்றிருந்த அனுபவங்களை நமது பாரதப் பிரதமர் நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொண்டார். கடலில் பாலம் எடுக்க ராமர் நினைத்த தருணம் காலச்சக்கரத்தை மாற்றி அமைத்தது என்றும் அதை தான் உணர முயற்சித்ததாகவும் நமது பாரத பிரதமர் தெரிவித்தார்.
கொள்ளை அழகு மிக்க குழந்தை ராமரின் திருவுருவச் சிலையின் கண் திறப்பு இன்று கோலாகலமாக நடைபெற்றது. தான் பிறந்து விளையாடி மக்களுடன் கலந்து உறவாடிய குழந்தை ராமர் இன்று மீண்டும் அயோத்தியில் அதே குழந்தை வடிவத்தில் சிலையாக அமைக்கப்பட்டிருப்பது சீரும் சிறப்புமிக்க பாரதத்தின் பண்பாட்டை கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் செயலாகும்.
புண்ணியமிக்க குழந்தை ராமரின் கண்திறப்பை கண்ணாரக் கண்டு களிக்க, இந்தியாவின் மற்ற மாநில அரசுகள் எல்லாம் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எண்ணத்துடன் குழந்தை ராமர் திருக்கோவில் திறப்பு விழாவின், நேரடித் திரைக்காட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. இது ஆளும் திமுக அரசின் பெரும்பான்மை மக்களான இந்து விரோதப் போக்கையும், இந்துக்களுக்கு எதிரான மனப்பான்மையையும், வெட்ட வெளிச்சமாக்கியது.
பாஜகவை பார்த்தும், பாரதப் பிரதமர் மோடி அவர்களை நினைத்தும், திமுகவிற்கு திகிலாக இருக்கிறது. எப்படியாவது இந்த ராமர் கோவில் திறப்பு விழாவினை தமிழக மக்கள் பார்க்க விடாமல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மிகவும் முயற்சித்தது.
மொத்த தேசமும் கொண்டாடும் குழந்தை ராமர் திருக்கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, தமிழக கோவில்களில் ஒளிபரப்பு செய்வதை தடுப்பதற்காக எதற்கு அறநிலையத்துறை இங்கே செயல்பட வேண்டும். இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனிநபர் உரிமையான எம்மதத்தையும் வழிபடும் அடிப்படை உரிமையை மறுப்பதற்கான அதிகாரத்தை தமிழக அரசுக்கு யார் தந்தது.
வாய்மொழி உத்தரவுகளின் மூலமே ஒரு வன்முறையை தூண்டலாம் என்று நினைத்திருந்த தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றமும் உச்சநீதி மன்றமும் உரத்த குரலில் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. மீண்டும் ஒருமுறை தமிழக அரசு உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் தலை குனிந்து இருந்திருக்கிறது.
அமைதியாக வழிபடும் பெரும்பான்மை மக்களின் உரிமையை தடுக்க நினைப்பது சட்டவிரோதம். அமைதியான முறையிலே செய்வதற்கு எதற்காக அனுமதி. இனி கோவிலில் சாமி கும்பிட கூட அறநிலையத்துறையின் அனுமதி பெற வேண்டுமா? என்றெல்லாம் மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள்.
மக்களுக்கு கொடுப்பதற்கான திட்டங்களை எதுவும் செய்யாமல், கெடுப்பதற்கான திட்டங்களை மட்டும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் திமுக அரசின் வீழ்ச்சியும் தொடங்கிவிட்டது. கொள்ளை அழகுக் குழந்தை ராமரின் தோற்றமும், கொள்கைப் பிடிப்புள்ள மோடி அவர்கள் ஆற்றலும் இன்று உலகம் கொண்டாடும் உன்னதச் செய்தி.
ராமர் பாரதத்தின் நம்பிக்கை. ராமர் பாரதத்தின் ஆதாரம். ராமர் பாரதத்தின் யோசனை. ராமர் பாரதத்தின் சட்டம். ராமர் பாரதத்தின் உணர்வு. ராமர் பாரதத்தின் சிந்தனை.
ராமர் பாரதத்தின் பிரதிஷ்டை. ராமர் பாரதத்தின் மரியாதை. பயணமும் ராமனே, விளைவும் ராமனே, நம்மோடு இருப்பவன் ராமனே, கொள்கையும் ராமனே, தொடர்ச்சியும் ராமனே, நிரந்தரமானவனும் ராமனே, விருப்பமும் ராமனே, தெளிவும் ராமனே, எங்கும் நிறைந்தவன் ராமனே, உலகமும் ராமனே, உலகளாவிய உன்னதனும் ராமனே எனத் தெரிவித்தார்.