வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும், பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகனைப் பிடிக்க, சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்திருக்கிறார்கள்.
பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவரது மனைவி மெர்லின். இந்த சூழலில், ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினும் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்திருக்கிறார்கள்.
அங்கு அச்சிறுமியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நீலாங்கரை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீஸார் விசாரிக்க மறுத்ததால், அச்சிறுமி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகப் பரவியது.
இதையடுத்து, நீலாங்கரை மகளிர் காவல்துறையினர், தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ, அவரது மனைவி மெர்லின் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஆண்ட்ரோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினும் தலைமறைவாகி விட்டனர். இதைத் தொடர்ந்து, இருவரையும் பிடிக்க சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.