வரும் லோக்சபா தேர்தலில் குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. இதையடுத்து, 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆளும் பா.ஜ.க. அரசு எடுத்து வருகிறது. எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி நிர்வாகிகளைக் கூட்டி தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறது.
மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு மக்களவைத் தொகுதிகளிலும் கட்சி அலுவலகங்களைத் திறந்து வருகிறது. அந்த வகையில், குஜாரத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நட்டா, “வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். குறிப்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை விட இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அதேபோல, வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் நடக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது. உண்மையிலேயே இது அதிர்ஷ்டம்” என்றார்.