காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளில் செய்யாததை, பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 வி.வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், காங்கிரஸ் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் கலந்துகொண்டனர். இந்த சூழலில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இமாசல் பிரதேச மாநிலம் ஹமீர்புரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியால் 60 ஆண்டுகளாக செய்ய முடியாத பணியை, பிரதமர் நரேந்திர மோடி அரசு 10 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது. செய்த பணிகளை மக்களிடம் கொண்டு செல்வது கட்சித் தொண்டர்களின் தலையாய பொறுப்பு.
நீண்ட நாளைய காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. 140 கோடி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேசத்தில் பிறந்தது முதல் இன்று வரை சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வரும் ஒரே அரசியல் கட்சி பா.ஜ.க. மட்டுமே என்பது நிரூபணமாகி இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.