அயோத்தியை இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாற்றும் முயற்சியாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனையடுத்து அயோத்தி நகரம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரும் நாட்களில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்கள் அயோத்தி நகரத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ரோம், மெக்கா உள்ளிட்ட நகரங்களை போல் அயோத்தி மத முக்கியத்துவம் வாய்ந்த நகராக உருவாகியுள்ளது.
இந்நிலையில் அயோத்தி நகரை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச அரசு 2021 ஆம் ஆண்டில் அயோத்தியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான மாஸ்டர் பிளானை தயாரித்துள்ளது.
இந்த மாஸ்டர் பிளான் 2031 ஆம் ஆண்டிற்குள் பண்டைய புனித நகரத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை முடிக்க இலக்காகக் கொண்டிருக்கும்” என்று மாநில அரசின் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மேம்படுத்த சுமார் ₹30,500 கோடி மதிப்பிலான 178 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2021 ஆவணத்தின்படி, மாநில அரசு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் இந்திய நாட்டினரின் திறனைப் பயன்படுத்துவதையும்,அயோத்தியை முக்கிய மையமாகக் கொண்டு ராமாயண சுற்றுலா ஒன்றை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஸ்ரீராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 10 வாயில்கள் நிறுவுதல், நிலத்தடி கேபிளிங்கிற்கான ஏற்பாடு மற்றும் 10,000 பேர் தங்கும் வசதியுடன் கூடிய இரவு நேர தங்குமிடம் கட்டுதல் ஆகியவை அயோத்தியை புதுப்பிக்கும் மகத்தான திட்டத்தில் அடங்கும்.
மேலும், அயோத்தியின் ராஜ் சதனை உயர்மட்ட பாரம்பரிய ஹோட்டலாக மாற்றும் திட்டம் உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நகரத்தில் உள்ள அனைத்து முக்கிய பொது இடங்கள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நகரம் முழுவதும் பல நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஸ்ரீ ராமருடன் உள்ள தொடர்பு காரணமாக சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் இவையும் பழுதுபார்க்கப்பட்டு மீட்டெடுக்கப்படும். நாட்டின் பிற பகுதிகளையும் கருப்பொருள் ராமாயண சுற்றுலாவுடன் இணைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
புதிய விமான நிலையம், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம், நகரமயமாக்கல் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலை இணைப்பு ஆகியவற்றுடன் அயோத்தியின் 10 பில்லியன் டாலர் மாற்றமானது புதிய ஹோட்டல்கள் மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளுடன் பல மடங்கு விளைவை ஏற்படுத்தும் என்று புரோக்கரேஜ் ஜெஃப்ரீஸ் சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது.
இது ஆண்டுக்கு 50 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்.இப்போது, எதிர்பார்க்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் எழுச்சியைக் கையாள, அயோத்தியில் நிலையான உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். அதற்காக, அரசு ஏற்கனவே நகரின் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதில் சில முக்கிய திட்டங்கள் முடிவு அடைந்துள்ளன. பல திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.