நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வீட்டின் வளாகத்தில் இருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று கவ்வி செல்லும், பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், இங்கு காட்டு யானை, கரடி, காட்டு மாடு, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக, இந்திர நகர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அப்படி குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் சிறுத்தை, அங்கு உள்ள நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை கவ்வி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த நிலையில், எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று வலம் வந்தது. அங்கு வீட்டின் வளாகத்தில் நாய் ஒன்று படுத்து கொண்டிருந்தது.
இதை நோட்டமிட்ட சிறுத்தை, அமைதியாக சென்று நாயின் கழுத்தை கவ்வி பிடித்தது. இதை பார்த்த, நாயின் உரிமையாளர் வெளியே வந்து, சிறுத்தையை விரட்ட முயன்றார். சிறுத்தை நாயை விட்டுவிட்டு வனத்திற்கு தப்பி சென்றது.
இந்த பதைபதைக்கும் காட்சிகள், அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.