திமுகவின் ஒரு குடும்பம் அதிகாரத்தில் இருக்க, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போடும் வேஷம்தான் சமூக நீதி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பூம்புகார் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சோழர்களின் முக்கியமான துறைமுக நகரமாக, கிரேக்க நாடு வரைக்கும் வணிக தொடர்பு கொண்டிருந்த நகரமாக, அபிராமி பட்டர் என்ற தன் பக்தருக்காக அமாவாசையையே பௌர்ணமியாக மாற்றிய அபிராமி அம்மன் குடி கொண்டிருக்கும் புண்ணிய பூமி.
சனாதனத்தை ஒழிப்போம் என்ற திமுக மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, இங்குள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் வந்து தனது 60 ஆம் கல்யாணத்தை நடத்திக் கொண்டார். இது தான் இவர்களின் சனாதன ஒழிப்பு நாடகம்.
அயோத்தி ராமர் கோயிலில், 11 நாட்கள் விரதம் இருந்து, நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிராணப் பிரதிஷ்டை செய்தார். தமிழகத்தின் பல நூற்றாண்டுங்கள் பழமை வாய்ந்த 35 ஶ்ரீ ராமர் திருக்கோவில்கள் உள்ளன. ஆனால் ராமருக்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை தமிழக மக்கள் காணக் கூடாது என்று, ஹிந்து மத விரோத திமுக அரசு விதித்த தடையை, நீதிமன்றம் சென்று முறியடித்திருக்கிறோம்.
பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு, அன்றைய பிரதமர் நேருவுக்கு தமிழக ஆதீனங்களால் வழங்கப்பட்ட செங்கோலை, ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தார்கள். நமது பாரதப் பிரதமர், அந்த செங்கோலை, புதிய பாராளுமன்றத்தின் மையக் கட்டிடத்தில் வைத்து பெருமைப்படுத்தியிருக்கிறார்.
வணக்கத்திற்குரிய தருமபுரம் ஆதீனத்தின் பாரம்பரிய பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை ஹிந்து விரோத திமுக அரசு தடை செய்தபோது, தமிழக பாஜக குரல் கொடுத்து, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு ஆதரவாக நின்றது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த தேரெழுந்தூர் அமைந்துள்ள தொகுதி.
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். கம்பன் ராமாயணம் அரங்கேற்றிய ரங்கநாத ஸ்வாமி கோவில் மண்டபத்தில், நமது பாரதப் பிரதமர் அமர்ந்து கம்பராமாயணத்தை கேட்டு மகிழ்ந்தார். தமிழுக்கும், தமிழ்க் கலாச்சாரத்துக்கும் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வழங்கும் மதிப்பு அத்தகையது.
வேங்கைவயல் சம்பவத்திலோ, திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த பட்டியல் சமூகப் பெண் தாக்கப்பட்டதிலோ, குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. ஆனால், சமூக நீதி என்று நாடகமாடும் திமுக கூட்டணிக் கட்சிகள் இது குறித்துப் பேசுவதே இல்லை.
திமுகவின் ஒரு குடும்பம் அதிகாரத்தில் இருக்க, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போடும் வேஷம்தான் சமூக நீதி. உண்மையான சமூக நீதி என்பது, குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளிலும், பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடி சமூகத்தில் இருந்து இரண்டு குடியரசுத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து, நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமையை வழங்கியது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இதுதான் உண்மையான சமூகநீதி.
சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக, இன்று நீதிமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது என்று கூறியிருக்கிறது. திமுகவின் பொய்கள் எல்லாம் மக்களுக்கு தெரிந்துவிடும் என்பதனால், ஒளிபரப்பப் பயப்படுகிறது திமுக. எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றாமல், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
குடகு மலையில் உற்பத்தி ஆகும் காவேரி நதி, பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் கடலில் கலக்கிறது. 1971 ஆம் ஆண்டில் இருந்து கேட்கப்பட்ட காவிரி தீர்ப்பாயத்தை தொடர்ந்து நிராகரித்து வந்தது காங்கிரஸ் கட்சி. காவிரி நதிநீர் வாரியத்தை 1998ஆம் ஆண்டு நமது வாஜ்பாய் அவர்கள் முதலில் அறிவித்தார்.
பின்னர் பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து. கடந்த 2018 ஆம் ஆண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடகம் மற்றும் தமிழகத்திற்கு இடையே இருந்த காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டவர் நமது பிரதமர் மோடி அவர்கள்.
மேகதாதுவில் நாங்கள் அணை கட்டுவோம் என கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதம் பிடிக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் காவிரிக்கு பிரச்சனை ஏற்படுகிறது. திமுகவும் காங்கிரசும் தமிழகத்தில் காவிரி நீருக்கு எதிரான கட்சிகள்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், நாட்டின் நலனுக்காக, நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, வளர்ச்சியும், ஊழலற்ற நல்லாட்சியும் தொடர, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்துவோம். ஊழல் குடும்ப கட்சிகளைப் புறக்கணிப்போம். தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.