ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த தை தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இக்கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் தைத் தேர் திருவிழா (நம் பெருமாள் பூபதி திருநாள்) ஜன.16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 4-ம் திருநாளில் தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதற்கென நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்துக்கு 4.30 மணிக்கு வந்தடைந்தார்.
அதிகாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. இந்த, தை தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.