சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 47 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்த நிலையில், 31 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுனான் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. லியாங்ஷுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியது.
இந்த நிலச்சரிவில் சிக்கி, 18 வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த 47 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர், தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 900-க்கும் மேற்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இடிபாடுகளை அகற்றி மண்ணுக்குள் புதைந்தவர்களின் சடலங்களை மீட்டு வருகின்றனர். மேலும், இயந்திரங்களைக் கொண்டு, மண் அகற்றப்பட்டு, மீட்புப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
மண்ணுக்குள் புதைந்தவர்களில் 31 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.