சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் நடைமேடை 6-ல் சொகுசு வசதிகளுடன் கூடிய உயர்தர காத்திருப்போர் அறை திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை இரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிட்ட அறிக்கையில், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குறுகிய காலம் தங்கி செல்லும் பயணிகளின் வசதிக்காக உயர்தர காத்திருப்போர் அறை திறக்கப்பட்டுள்ளது.
இரயில் நிலையத்தின் பிரதான வாயிலின் நடைமேடை 6 அருகே அமைந்துள்ள, இந்த அறை விமான நிலையத்துக்கு இணையான அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதைப் பராமரிக்க ‘டென் 11 ஹாஸ்பிட்டாலிட்டி’ எனும் நிறுவனத்துடன் 5 ஆண்டுக்கு 17 கோடியே 75 இலட்ச ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறையில் சுமார் 180 போ் தங்கும் வகையில், சொகுசு இருக்கை, படுக்கை வசதிகள் உள்ளன. சைவ, அசைவ உணவகங்கள், சிற்றுண்டி கடை, உடமைகளை வைக்க பிரத்தியேக வசதி, கழிவறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த அறையில் ஒரு மணி நேரம் தங்குவதற்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த அறையில் பயணிகளுக்கு இலவச வைஃபை, டீ, காபி உள்ளிட்டவை வழங்கப்படும். படுக்கை வசதி கொண்ட அறையில் 3 மணிநேரம் தங்குவதற்கு ஒரு நபருக்கு 840 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இதில், பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில், குளிர்பானம், வைஃபை உள்ளிட்டவை வழங்கப்படும். பயணிகள் கூடுதலாக தங்கும் காலத்தைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடும் எனக் கூறப்பட்டுள்ளது.