75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, வரும் 26-ஆம் தேதி வரை, விமானத்தில் செல்லும் பயணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பார்ப்போம்.
வருகிற 26-ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அப்போது, டெல்லி கடமைப்பாதையில் வீரர்கள் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சக துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, மோட்டார் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நெருங்கி வருவதால், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதற்கு, பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, பெங்களூரு ஏவியேஷன் என்ற விமானச் செய்தி இணையதளம் பகிர்ந்துள்ளது.
பெங்களூரு ஏவியேஷன் படி, கேரி-ஆன் பேக்கேஜில் கொண்டு செல்லக்கூடிய பொருட்களுக்கு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதில், டால்கம் பவுடர், தூள் மசாலா, மசாலாக்கள், லைட்டர்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை அடங்கும்.
கூடுதலாக, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), ஜனவரி 26-ஆம் தேதி விமானங்களில் செல்லும் பயணிகளுக்கான பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது. அதன்படி, உங்கள் பயண ஆவணங்களை பத்திரமாக வைத்திருங்கள். பயண ஆவணங்கள் எப்போது வேண்டுமானாலும் அடையாளச் சரிபார்ப்புக்காக கேட்கப்படும்.
ஜனவரி 26-ஆம் தேதி, விமானங்களில் பயணிப்போர், அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லவும், சிரமமில்லாமல் செக்-இன் செய்வதற்கான விமான வழிகாட்டுதல்களைச் சரிபார்க்கவும் அறிவுறுத்தி உள்ளது.
விமானங்களில் செல்லும் பயணிகள் ஆணி, கத்தரிக்கோல் அல்லது ஏதேனும் கூர்மையான பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு பயணிகளை AAI கேட்டுக் கொண்டுள்ளது.
பயணிகள் விமானங்களில் செல்வதற்கு முன்பாக, பவர் பேங்க், லைட்டர் போன்ற பொருட்கள் எடுத்து செல்வதை தவிர்த்துவிடவும், தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் எடுத்து செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமானச் செயல்பாடுகள் ஜனவரி 26-ஆம் தேதி வரை தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்படும். ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரை, தினமும் காலை 10.20 முதல் மதியம் 12.45 வரை டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கவோ, புறப்படவோ அனுமதி கிடையாது.
இதற்கிடையே, குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் மத்திய மும்பையின் சிவாஜி பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியில், ஜனவரி 26-ஆம் தேதி விமானங்கள் பறக்க தடை விதித்து மும்பை காவல்துறை செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.