அயோத்தி ராமர் கோவிலுக்கு மகாராஷ்டிராவில் இருந்து 7 அடி 3 அங்குல நீளமுள்ள ராட்சத வாளை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தினர்.
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அயோத்தி ராமர் கோவிலுக்குப் பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு மகாராஷ்டிராவில் இருந்து 7 அடி வாளினை பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பக்தர்கள் 80 கிலோ எடையுள்ள 7 அடி 3 அங்குல நீளமுள்ள ராட்சத வாளை காணிக்கையாகச் செலுத்தினர் .
இந்த வாளைக் கொண்டு வந்த பக்தர்களில் ஒருவரான நிலேஷ் அருண் கூறுகையில், ” நாங்கள் மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையிலிருந்து வந்துள்ளோம். நாங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயுதங்களைச் சேகரிப்பவர்கள், பல இடங்களில் ஆயுத கண்காட்சிகளையும் நடத்தியுள்ளோம். இந்த வாளின் சிறப்பு அம்சம் என்ன என்றால், இது 80 கிலோ எடையும் 7 அடி 3 அங்குல நீளமும் கொண்டது ” என்று கூறினார்.
மேலும் அவர், ” இந்த வாள் நந்தக் கதா போன்றது. கதா என்பது விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அவருடைய ‘தசாவதாரம்’ அனைத்தும் இணைக்கப்படுகிறது. விஷ்ணு பகவானின் மற்றொரு அவதாரமான ஸ்ரீ ராமருக்கு இந்த கதா போன்ற வாளை கொண்டுவந்துள்ளோம்.
இந்த வாளில் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. வாளின் கைப்பிடியில் பித்தளை பயன்படுத்தப்பட்டு அதற்கு மேல் தங்க உறையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வாள் செய்வதற்கு மூன்றரை மாதங்கள் ஆனது ” என்று கூறினார்.