தை மாதத்தில் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபையின் 153 வது ஆண்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, சத்தியஞான சபையில் தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கிவருகிறது.
1872 ஆம் ஆண்டு அன்று தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாடு விழா நடைபெற்றது.
1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, அங்கு கூடியிருந்தவர்களுக்கு வள்ளலார் அருளை வழங்கியதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் தைப்பூச நாளன்று சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். பொதுவாக தைமாசம் தவிர்த்த பிற மாத பூசநட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.
அந்த வகையில் சத்திய ஞான சபையின் 153 வது ஆண்டு ஜோதி தரிசன விழாவையொட்டி காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி ஜோதி காண்பிக்கப்பட்டது.
இன்றை தினம் காலை 10 மணி முதல் பகல் 1.00 மணி, இரவு 7 மணி முதல் 10 மணி வரை, நாளை காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
கருப்புத்திரை, நீலத்திரை,பச்சைத்திரை, சிவப்புத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை, கலப்புத்திரை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.