பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கும் முடிவு, ஜன நாயக்கருக்கு மட்டுமின்றி, நாட்டின் 70 கோடி ஏழை மக்களுக்கும் செய்யும் மரியாதை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
புதுடெல்லியில் கர்பூரி தாக்கூரின் 100-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதன் மூலம், அனைவருக்கும் நீதி மற்றும் சம உரிமைகள் என்ற இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மந்திரத்தை மதிக்கும் பணியை பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கிறார்.
இந்த கௌரவம் கோடிக்கணக்கான ஏழை இளைஞர்களின் மனதில் எதையும் சாதிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. கர்பூரி தாக்கூர் தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தாழ்த்தப்பட்டோர், ஏழைகள் மற்றும் தலித்துகளின் நலனுக்காக அர்ப்பணித்தவர்.
ஏழைகளின் நலனுக்காக நரேந்திர மோடி அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் 23 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். 4 கோடி ஏழை குடும்பங்களுக்கு பக்கா வீடுகள், 10 கோடி இலவச எல்.பி.ஜி. இணைப்புகள் மற்றும் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன” என்றார்.