ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்ட நிலையில், பெண் கல்விக்கான தடையை நீக்குமாறு சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி பொறுப்பேற்றது முதல், பெண்கள் கல்வி பயில பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பதை முதலில் தாலிபன்கள் தடை செய்தனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்கள் சில பாடங்களைப் படிப்பதற்குத் தடை விதித்தனர்.
அதை தொடர்ந்து தங்கள் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று கூறினர். டிசம்பர் 20ஆம் தேதி பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்வதற்குத் தடை விதித்தனர்.
சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்தன. பின்னர் சில நாட்களுக்குப் பிறகு உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதைத் தடை செய்தனர்.
இந்நிலையில் பெண்கள் கல்வி பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்ட நிலையில், பெண் கல்விக்கான தடையை நீக்குமாறு சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
உலகம் முழுவதும் ஜனவரி 24-ம் தேதி சர்வதேச கல்வி தினம் கொண்டாடப்படும் நிலையில், பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பல்வேறு சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன .
ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்பு தூதர் ரோசா ஒடுன்பயேவா, அம்னெஸ்டி இன்டர்நேஷனல், அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர், மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் பெண் கல்விக்கான தடையை நீக்குமாறு தலிபான்களிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.