அயோத்தி ஶ்ரீராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, தமிழகக் கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யும் நிகழ்வு குறித்த உண்மைச் செய்தியை வெளியிட்ட “தினமலர்” நாளிதழ் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ள தி.மு.க அரசுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது X பக்கத்தில், தி.மு.கவிற்கும், தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், அயோத்தி ஶ்ரீராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, தமிழகக் கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, தி.மு.க அரசு தடை செய்து வாய்மொழியாக உத்தரவிட்டதை, தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இதனை அடுத்து, தினமலர் நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் மீது, மதுரை காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
அறநிலையத் துறை அதிகாரிகள் இந்த தடை குறித்து தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள், கோவில்களுக்கு வந்த பக்தர்களைத் தடுத்த செய்திகள் என பல ஆதாரங்கள் உள்ள நிலையிலும், தி.மு.க அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்வது ஊடகங்களின் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. அனைத்து ஊடகங்களும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று தி.மு.க எதிர்பார்ப்பது வேடிக்கை.
அடக்குமுறையைக் கையாளும் தி.மு.க அரசு, பொதுமக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் தி.மு.க அரசின் இது போன்ற அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என காட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.