ஜெய் ஸ்ரீ ராம்’ வாசகம் பொறித்த கொடியுடன் ஸ்கை டைவ் செய்த முன்னாள் கடற்படை அதிகாரி !
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி ராஜ்குமார், தாய்லாந்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ வாசகம் பொறித்த கொடியுடன் ஸ்கை டைவ் செய்தார்.
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கொண்டாடும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி ராஜ்குமார் ஜெய் ஸ்ரீ ராம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட காவிக் கொடியுடன் தாய்லாந்தில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” இதுவரை 15ஆயிரம் முறைக்கு மேல் ஸ்கைடைவிங் செய்துள்ளேன். ராமர் கோயில் திறப்பு விழா அன்று இந்தியாவில் இந்த சாதனை நிகழ்த்தத் திட்டமிட்டேன். ஆனால் அனுமதி வழங்குவதில் தாமதம் ஆனது. ஆகையால் தாய்லாந்தில் இச்சாதனையை நிகழ்த்தினேன்” என்று கூறினார்.