ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் தங்கம் எடுப்பதற்காக தோண்டப்பட்ட சுரங்கம் இடிந்து விழுந்ததில், 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், தங்கம் அதிகளவில் கிடைக்கிறது. இது ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளராக உள்ளது. இந்த நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க பல நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன.
இந்த நாட்டில் சுரங்க பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என்று கூறப்படுகிறது. முறையான பாதுகாப்பு ஏற்படுகள் இன்றி வேலை செய்வதால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. உரிய பாதுகாப்பின்றி சுரங்கம் தோண்டுபவர்கள் மீது அந்நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மாலி நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில், 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்மேற்கு கோலிகோரோ அருகே கங்காபா மாவட்டத்தில் உள்ள, தங்க சுரங்கத்தில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். கடந்த 19-ஆம் தேதி சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், உள்ளே இருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில், 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும், உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.