அயோத்தி இராமர் கோவிலில் கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்த நிலையில், முதல் நாள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் இராம் லல்லாவை தரிசனம் செய்தனர். இவர்கள் செலுத்திய காணிக்கை 3 கோடி ரூபாய் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லாவை பிரதிஷ்டை செய்தார். இவ்விழாவில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும், நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 வி.வி.ஐ.பி.க்கள் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, 23-ம் தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் நடை திறக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இராம பிரானை தரிசிக்கக் குவிந்தனர். காலை மணி முதல் இரவு 10 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
அந்த வகையில், முதல் நாள் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் இராம பிரானை தரிசித்ததாக கோவில் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், அன்றைய தினம் மட்டும் பக்தர்கள் செலுத்திய காணிக்கைத் தொகை 3.17 கோடி ரூபாய் என்று கோவில் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது.