அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்புவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பகவான் ஸ்ரீ ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க ஸ்ரீதர் வேம்பு அவரது தாயார் ஜானகி, சகோதரர் குமார் வேம்பு மற்றும் அவரது மனைவி அனுபமாவுடன் சென்றிருந்தார்.
பகவான் ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டை முடிந்தவுடன், கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஸ்ரீதர் வேம்பு மற்றும் 79 வயதான அவரது தாயார் மக்கள் கூட்டத்திற்கு நடுவே கோவிலுக்குள் சென்று பகவான் ஸ்ரீ ராமரை தரிசிக்க கருவறைக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது ஸ்ரீதர் வேம்புவின் தாயார் வைத்திருந்த பை காணாமல் போனது. அதில் ரூ.63,550 ரொக்கம், ஆதார் அட்டை மற்றும் பிற பொருட்கள் இருந்தது. பிறகு ஸ்ரீதர் வேம்பு அவரது தாயாரை இந்த கூட்டத்தில் கோவிலுக்குள் செல்ல வேண்டாம் என்ற வற்புறுத்தினார்.
ஆனால் ஜானகி அம்மாள் என்ன நேர்ந்தாலும், மன உறுதியுடனும், பக்தியுடனும், இறைவனை தரிசனம் செய்த பின்னரே வெளியேற வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
அப்போது அவர் அங்கிருந்து ஒரு இந்தி பேசும் பாதுகாவலரின் உதவியை நாடினார். ஆனால் ஜானகி அம்மாவுக்கோ இந்தி தெரியாது. இருப்பினும் அந்த பாதுகாவலர் இவரின் வயதை கருத்தில் கொண்டு குழந்தை ராமரை தரிசிக்க உதவினார். அப்போது ஜானகி அம்மாள் மனநிம்மதியுடன் பகவான் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்தார்.
இராமரை கண்ட மகிழ்ச்சியில் அவர் தனது பை பறிப்போனதை ஒருப்போது கவலைகொள்ளாமல், இது ராம் லாலாவின் விருப்பம் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.
அப்போது அங்கு ஒரு அதிசயம் நடந்தது. ஜானகி அம்மாள் பறிகொடுத்த அந்த பை ஒரு சுவாமிஜியின் பையில் தெரியாமல் விழுந்துள்ளது. அவர் உத்தரகாண்ட், ஹரித்வாரை சேர்ந்த ஞான் பிரேமானந்த்ஜி மகராஜ் ஆவார்.
இவர் அந்த பையில் இருந்த ஆதார் அட்டையைக் கண்டு அவர் உடனடியாக பையை உபி போலீசாரிடம் ஒப்படைத்தார். தமிழக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், அயோத்தி தொண்டர்களின் உதவியுடன் காவல்துறையைத் தொடர்பு கொண்டு, ஆடிட்டர் நண்பர் மூலம் பையை அப்படியே பாதுகாப்பாகத் திருப்பித் தர ஏற்பாடு செய்தனர்.
அந்த பையை பத்திரமாக போலீஸிடம் ஒப்படைத்த சுவாமிஜி, போலீஸிடம் இருந்து பையை பத்திரமாக பெற்றுக் கொண்டார்களா என்பதை தெரிந்துகொள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது சகோதர்கள் அந்த பை திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையை விட்டுவிட்டு, இழப்புக்காக கிட்டத்தட்ட சமரசம் செய்துகொண்டிருந்த நேரத்தில், மரியாதைக்குரிய சுவாமிஜி மூலம் அது உ.பி காவல்துறையினரின் பாதுகாப்பான கைகளில் உள்ளது என்ற செய்தி அவர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஸ்ரீதர் வேன்புவின் தந்தை எஸ்.வேம்பு கூறுகையில், ” ஸ்ரீ ராம் லாலாவின் கருவறையில் பிராண பிரதிஷ்டை செய்தவுடன் அவரது தீவிர பக்தருக்கு ராம் லாலா அருளும் முதல் செயல் இதுவாகும். அவருடைய பக்தர்களை மீட்பதற்கான அவரது லீலை ஒருவரது கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
மதிப்பிற்குரிய சுவாமிஜி, தமிழகம் மற்றும் உ.பி.யைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மற்றும் உ.பி காவல்துறையினர், அவர்கள் அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சிகள், பையுடன் கூடிய பணத்தை மீட்டுப் பாதுகாப்பாக உரிமையாளரிடம் ஒப்படைத்ததற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிந்துகொள்கிறேன். கலியுகத்தில் ராமராஜ்யம் அயோத்தியில் தொடங்கியுள்ளது. ஜெய் ஸ்ரீராம் ” என தெரிவித்துள்ளார்