வாரணாசியில் அமைந்திருக்கும் ஞானவாபி மசூதி வளாகத்தில், ஏற்கெனவே இந்து கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டு முகலாய அரசர் ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில் இந்து கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே, ஞானவாபி மசூதி வளாகத்தில் அமைந்திருக்கும் சிருங்கார கௌரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து, ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, ஆய்வு தொடங்கிய நிலையில், தொல்லியல் துறை ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மசூதி தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, ஆய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து ஜூலை 26-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது.
இதன் பிறகு, தொல்லியல் துறை ஆய்வுக்குத் தடை கோரி, மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றமும் மறுப்புத் தெரிவித்து விட்டது.
இதைத் தொடர்ந்து, மசூதியில் மீண்டும் ஆய்வைத் தொடர ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தொல்லியல் துறையினர் மீண்டும் ஆய்வைத் தொடங்கினர். அப்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை இந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிவலிங்கத்தை மூடி சீல் வைத்து பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் தொல்லியல் துறை ஆய்வு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆய்வை நிறைவு செய்த தொல்லியல் துறை, டிசம்பர் 18-ம் தேதி ஆய்வறிக்கையை வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. எனினும், இந்த ஆய்வறிக்கையை 4 வார காலங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று தொல்லியல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. எனவே, ஆய்வறிக்கை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதனிடையே, ஆய்வறிக்கையை வெளியிடக் கோரி இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து, ஆய்வறிக்கையை வெளியிடுவது தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட நீதிமன்றம், இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் இந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிட மாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து ஆய்வறிக்கையை பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்டது.
இதன் பிறகு, இரு தரப்பினருக்கும் ஆய்வறிக்கை நகல் வழங்கப்பட்டது. இந்த சூழலில், இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
அப்போது, “தற்போது ஞானவாபி வளாகம் அமைந்திருக்கும் இடத்தில் ஏற்கெனவே மிகப்பெரிய இந்து கோவில் இருந்ததற்கான சாட்சியங்கள் இருப்பதாக தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்து கோவிலின் தூண்களில் சிறிய மாற்றங்களை மட்டும் செய்து, அதன் மீது கட்டுமானங்களை எழுப்பி ஞானவாபி மசூதி கட்டப்பட்டிருக்கிறது.
மேலும், ஞானவாபி வளாகத்தின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் ஏற்கெனவே இருந்த இந்து கோவிலின் ஒரு பகுதி என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, இந்து கோவிலில் பயன்படுத்தப்பட்ட சிலைகள், மசூதி வளாகத்திலுள்ள நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டறிந்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வில், இந்து கோவிலில் இருந்த கல்வெட்டுகளில் தேவனகரி, தெலுங்கு, கன்னடம், கிராந்தி உட்பட 32 வகையான எழுத்துகள் இருந்ததும் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த எழுத்துகளின் வாயிலாக ஜனார்த்தனா, ருத்ரா, உமேஸ்வரா ஆகிய 3 இந்து கடவுள்களின் பெயர்களும் இருப்பதை தொல்லியல் துறை அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள்” என்று கூறினார்.