வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும், தொகுதிப் பங்கீடு வரை பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் வெளியாகும் தகவலால் “இண்டி” கூட்டணி கலக்கத்தில் இருக்கிறது.
2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றிபெற்று, 2-வது முறை ஆட்சியில் இருந்து வருகிறது. மேலும், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் 3-வது முறையாக பா.ஜ.க.தான் வெற்றிபெறும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஆகவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 26 மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து “இண்டி” என்கிற பெயரில் கூட்டணியை அமைத்தன. இக்கூட்டணி உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் பீகார் முதல்வர் நிதீஷ்குமார்.
காரணம், 2020 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து நிதீஷ்குமார் கட்சி போட்டியிட்டது. இத்தேர்தலில் நிதீஷ்குமார் கட்சியை விட பா.ஜ.க.தான் அதிக இடங்களில் வெற்றிபெற்றது. ஆனாலும், நிதீஷ்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது.
ஆனால், முதல்வர் பதவியில் அமர்ந்ததும் நிதீஷ்குமாரின் போக்கு மாறியது. இதனால், பா.ஜ.க.வுக்கும் நிதீஷ்குமாருக்கு இடையே பனிப்போர் நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ்குமார், காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.
எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வுக்கு எதிரான மாநிலக் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்தார். இக்கட்சிகளின் முதல் கூட்டத்தையும் தனது மாநிலத்திலேயே நடத்தினார். பெங்களூரில் நடந்த 2-வது கூட்டத்தில் இக்கூட்டணிக்கு “இண்டி” கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டது.
இதன் பிறகு நடந்த கூட்டங்களில் கூட்டணிக்குத் தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது, இப்படி ஒரு கூட்டணியை ஆரம்பிக்கக் காரணமாக இருந்த தன்னைத்தான் தலைவராக அறிவிப்பார்கள் என்று நிதீஷ்குமார் எதிர்பார்த்திருந்தார். ஆனால், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அறிவித்து விட்டார்.
இதனால், நிதீஷ்குமார் படு அப்செட். எனவே, கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கத் தொடங்கினார். இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் இண்டி கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தன.
மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.தான் வெற்றிபெறும் என்று பரவலான கருத்துகள் நிலவி வருகின்றன. இந்த சூழலில், பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு மத்திய பா.ஜ.க. அரசு பாரத ரத்னா விருதை அறிவித்தது.
உடனே, முதல் ஆளாக பா.ஜ.க.வை பாராட்டியதோடு, வாரிசு அரசியலையும் கடுமையாக விமர்சித்தார். அதாவது, கூட்டணியில் இருந்து லாலுவின் மகன்களின் ஒருவர் அமைச்சராகவும், மற்றொருவர் துணை முதல்வராகவும், மகள் எம்.பி.யாகவும் உள்ளனர்.
எனவே, இவர்களை குறிவைத்துத்தான் நிதீஷ்குமார் பேசியதாக செய்திகள் பரவின. இதனால் ஆத்திரமடைந்த வெளிநாட்டில் வசித்து வரும் லாலுவின் மகள், நிதீஷ்குமாரை கடுமையக விமர்சித்தார். இதையடுத்து கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, இண்டி கூட்டணிக்கு கல்தா கொடுத்துவிட்டு, மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் முடிவுக்கு நிதீஷ்குமார் வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், பா.ஜ.க.வுடன் கூட்டணி முடிவாகி விட்டது என்றும், தொகுதிப் பங்கீடு வரை பேசி முடிக்கப்பட்டு விட்டது என்று தகவல்கள் தீயாகப் பரவி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, பீகார் சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு, பா.ஜ.க.வுடன் மீண்டும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தலை நடத்தலாம் என்கிற முடிவிலும் நிதீஷ்குமார் இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.
மேலும், இக்கூட்டணி உறுதியானால் பீகார் மாநிலத்தில் உள்ள பெட்டியாஹ் மாவட்டத்தில் பிரதமர் மோடி பிப்ரவரி 4-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அப்போது, பிரதமர் மோடியுடன், நிதீஷ்குமார் ஒரே மேடையில் தோன்றுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.