75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ரிஷிகேஷில் உள்ள சந்திரேஷ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கம் தேசிய கொடி நிறத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சந்திரேஷ்வர் கோவிலில் உள்ள சிவலிங்கம் தேசிய கொடி வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள மஹாகாலேஷ்வரர் சிவலிங்கம் அலங்காரம் செய்யப்பட்டு, அருகில் தேசிய கொடிகள் வைக்கப்பட்டுள்ளன.
சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூவர்ணக் கொடி நிறத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ள சிவலிங்கத்தை, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டிலும் ரிஷிகேஷில் உள்ள சிவலிங்கம் தேசிய கொடியின் வண்ணங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அரிசி, மல்லி, ரோஜா இதழ்கள், சாமந்தி இதழ்கள் மற்றும் இலைகளால் சிவலிங்கத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.