பிரான்சில் பயின்ற இந்திய முன்னாள் மாணவர்களுக்கு விசா நடைமுறையை எளிதாக்குவோம் என அந்நாட்டு அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்றார். இதற்காக நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையை முதலில் பார்வையிட்ட மேக்ரான் அதன் பின், அங்கு நடந்த கலாச்சார நிகழ்ச்சி, கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பார்த்து வியந்தார்.
இதையடுத்து, ஜந்தர் மந்தரில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி வரவேற்றார். பின்பு அருகில் இருந்த 18ம் நுாற்றாண்டு விண்வெளி ஆய்வுக் கூடத்தை இருவரும் சுற்றிப் பார்த்தனர். இதை பாரம்பரிய கட்டடமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
இதனிடையே பிரான்ஸ் அதிபர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,2030 ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை பிரான்ஸ் வரவேற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “அனைவருக்கும் பிரெஞ்ச், சிறந்த எதிர்காலத்திற்கான பிரெஞ்ச் என்ற முன்முயற்சியுடன் அரசுப் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியைக் கற்க புதிய வழிகளைத் தொடங்குகிறோம். பிரெஞ்ச் மொழியைக் கற்க புதிய மையங்களுடன் அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறோம்.
நாங்கள் சர்வதேச வகுப்புகளை உருவாக்குகிறோம், இது பிரெஞ்சு மொழி பேசத் தெரியாத மாணவர்களை எங்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும். பிரெஞ்சு படித்த எந்த முன்னாள் இந்திய மாணவர்களுக்கும் விசா நடைமுறையை எளிதாக்குவோம். ஐரோப்பிய நாட்டில் படித்த மாணவர்களுக்கும் விசா செயல்முறை நெறிப்படுத்தப்படும் என்றும், அவர்கள் திரும்பி வருவதை எளிதாக்கும் என்றும் பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார்.