நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உட்பட பாரதத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், தனக்கு கிடைக்குத்துள்ள பத்ம விபூஷண் விருதை பெருமையுடன் அர்ப்பணிப்பதாக முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி, சென்னையைச் சோ்ந்த பரத நாட்டியக் கலைஞா் பத்மா சுப்பிரமணியம், பீகாரைச் சோ்ந்த மறைந்த சமூக ஆா்வலா் பிந்தேஸ்வா் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருப்பதாவது, இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு அறிவித்துள்ள பத்ம விபூஷண் விருதை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த விருதை நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உட்பட பாரதத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பெருமையுடன் அர்ப்பணிக்கிறேன்.
இந்த விருது எனது பொறுப்பை மேலும் அதிகரித்துள்ளது. பாரதத்தை உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நம்புகிறேன். வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க மக்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.