ஈராக்கில் “மாஸ்” மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்கதையாகி இருக்கும் நிலையில், பல்வேறு குற்றச்செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட 13 சிறைக் கைதிகளுக்கு திடீரென ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ஈராக் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றும் ஒரே சிறையாக தெற்கு மாகாணத்தில் உள்ள நசிரியா சிறை இருந்து வருகிறது. இந்த சிறையில் பல முறை “மாஸ்” மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 2017-ம் ஆண்டு 3 மாதங்களுக்கும் குறைவான இடைவெளியில், முறையே 41 மற்றும் 38 பேர் கொண்ட 2 வெகுஜன மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
இதன் காரணமாக, ஈராக்கியர்கள் நசிரியா சிறையை “அல் ஹவுட்” அல்லது திமிங்கலம் என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில், திமிங்கலம் மீன்களை விழுங்குவது போல இச்சிறை மக்களை விழுங்குகிறது. எனினும், 2020-ம் ஆண்டு முதல் இதுபோன்ற வெகுஜன மரண தண்டனைகள் படிப்படியாகக் குறைந்து வந்தன. இது ஆறுதல் அளிப்பதாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வெகுஜன மரண தண்டனை அரங்கேறத் தொடங்கி இருக்கிறது.
அதாவது, ஈராக்கில் பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்ட சுமார் 8,000 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 25-ம் தேதி நசிரியா சிறையில் 13 கைதிகளுக்கு மாஸ் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதல்நாள் மாலை ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு மறுநாள் அதிகாலையிலேயே மரண தண்டனையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
முன்பெல்லாம், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முறையான அறிவிப்பு தெரிவித்த பிறகு, நாள் குறித்து தண்டனையை நிறைவேற்றி வந்தனர். ஆனால், தற்போது திடீரென 13 சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
இதுகுறித்து நசிரியா சிறையில் உள்ள கைதி ஒருவர் தனது வழக்கறிஞரிடம், “தூக்கிலிடப்படவிருக்கும் 13 பேரின் பெயர்கள் 24-ம் தேதி மாலை சிறையின் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலையில் அதிகாரிகள் தூக்கிலிட்டு விட்டனர். மேலும், அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவர்களது குடும்பத்தினரையோ அல்லது வழக்கறிஞர்களோ அழைக்க அனுமதிக்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.
இச்சம்பவத்துக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஈராக் ஆராய்ச்சியாளர் சாரா சன்பார் கூறுகையில், “ஈராக்கில் வெகுஜன மரண தண்டனைகள் புதுப்பிக்கப்படுவது ஒரு மோசமான வளர்ச்சியாகும். ஈராக் அரசாங்கம் உடனடியாக மரண தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஈராக்கிய ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், “ரகசிய மரண தண்டனைகள்” என்று தெரிவித்திருக்கிறது. மேலும், வெளிப்படைத்தன்மை அல்லது முன்னறிவிப்பு இல்லாமல் மரண தண்டனைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றும் தெரிவித்திருக்கிறது.