ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் ஜெங்குடன் மோதினார். இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது சீனர் என்ற பெருமையுடன் களமிறங்கினார் குயின்வென் ஜெங். சுமார் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் அரினா சபலென்கா 6 – 3, 6 – 2 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்றார்.
குயின்வென் ஜெங்-ஆல் எந்த வகையிலும் அரினா சபலென்காவின் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து ஆட முடியவில்லை. கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய அவர் நேர் செட்களில் தோல்வியை தழுவினார்.
இந்த வெற்றி மூலம் தன் இரண்டாவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் அரினா சபலென்கா. குயின்வென் ஜெங் மோசமாக தோற்றாலும் இந்த தொடரின் முடிவில் வெளியாகப் போகும் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் அவர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற உள்ளார்.