கூட்டணி கட்சிகளிடம் காங்கிரஸ் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பாருங்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கடசி தனித்து போட்டியிடும் என்றும், திரிணாமுல் முன்மொழிந்த சீட் பகிர்வு வாய்ப்பை காங்கிரஸ் தவற விட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்தார்.
இதனிடையே பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் தலைமை நியாயமாக நடந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.
தங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு நியாயம் செய்யாமல், அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்காமல் இருந்தால், பிரிந்து செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படும் என்றும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறினார்.