பாஜக ஆதரவுடன் அமைக்கப்படும் புதிய அரசில் நிதிஷ்குமாருடன் இரண்டு துணை முதல்வர்கள் பதவியேற்பார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. பீகாரில் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த லாலுவின் மகள், தனது சமூக வலைத்தள பக்கங்களில் நிதிஷ்குமாரை வறுத்தெடுத்தார்.
இந்நிலையில் இன்று ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், தமது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கூட்டணி, பதற்றமான நீரில் பயணித்தது. பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் நாங்கள் ஒன்றிணைந்தாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி எங்கள் முக்கிய கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டோம் என்றார்.
இதனிடையே பாஜக ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று பாட்னா செல்கிறார்.
பாஜக ஆதரவுடன் அமைக்கப்படும் புதிய அரசில் நிதிஷ்குமாருடன் இரண்டு துணை முதல்வர்கள் பதவி ஏற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி மற்றும் பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
243 பேர் கொண்ட பீகார் சட்டசபையில், ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து பாஜகவுக்கு 78 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.