ஆஸ்திரேலியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் கடைசி போட்டியில் மேற்கிந்திய அணி வெற்றி பெற்றதால் 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் முடிந்தது.
மேற்கிந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய அணி 311 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.
மேற்கிந்திய அணியில் அதிகபட்சமாக கவேம் ஹாட்ஜ் 79 ரன்களும், கெவின் சின்க்ளேர் 50 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் டிக்ளேர் செய்தது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் கவாஜா 75 ரன்கள் சேர்த்து 8 வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து 22 ரன்கள் முன்னிலை பெற்ற மேற்கிந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இதில் மெக்கன்சி 41 ரன்களும், ஏத்தான்சே 35 ரன்களும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 33 ரன்கள் எடுக்க 193 ரன்களில் அந்த அணி ஆட்டம் இழந்தது.
இதனை அடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இதில் உஸ்மான் கவாஜா 10 ரன்களிலும், மார்னஸ் லாபஸ்சேன் ஐந்து ரன்களிலும் டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகியும், கேமரான் கிரீன் 42 ரன்களும், அலெக்ஸ் கெரி 2 ரன்கள் எடுத்து அந்த அணி கடுமையாக தடுமாறியது.
எனினும் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மித் கடுமையாக போராடினார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 20 ரன்கள் இருக்க மேற்கிந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு விக்கெட்டுகள் தேவைப்பட்டது.
இதனால் போட்டி பரபரப்பின் உச்சத்துக்கு சென்றது. எனினும் மேற்கிந்திய வீரர்கள் கூலாக பந்து வீசி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்மித் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரையும் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்தது.
பகல் இரவு டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய வீரர் சம்மர் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்களை விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி சரித்திரம் படைத்துள்ளார்.
இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது இரண்டையும் சம்மர் ஜோசப் வென்று அசத்தியுள்ளார்.