உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி குறித்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது.
இந்த மசூதி 17-ம் நூற்றாண்டு முகலாய அரசர் ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில் இந்து கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறி வருகின்றனர்.
இதை ஆய்வு செய்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன என்பதை பற்றி பார்ப்போம் :
வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர் (ஏ.எஸ்.ஐ.), அங்கு மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இந்து கோவில் ஒன்று இருந்ததாகக் கூறியுள்ளனர்.
தொல்லியல் துறையின் நான்கு மாத கால ஆய்வில், அறிவியல் ஆய்வு, கட்டடக்கலை எச்சங்கள், அம்சங்கள், கலைப்பொருட்கள், கல்வெட்டுகள், கலை மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தற்போதுள்ள மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு இந்து கோவில் ஒன்று இருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஏ.எஸ்.ஐ. அறிக்கையில், “ஒரு அறைக்குள் கண்டெடுக்கப்பட்ட அரபு-பாரசீக மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு, மசூதி ஔரங்கசீப் ஆட்சியின் 20வது ஆண்டில் (1676-77) கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.
எனவே, 17ஆம் நூற்றாண்டில் ஔரங்கசீப் ஆட்சியின் போது ஏற்கெனவே இருந்த கட்டமைப்பு அழிக்கப்பட்டு, அதன் சில பகுதிகள் மாற்றப்பட்டு, கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டன ?
1. தற்போதுள்ள கட்டமைப்பில் உள்ள மைய அறை மற்றும் ஏற்கெனவே இருக்கும் கட்டமைப்பின் பிரதான நுழைவுவாயில்.
2. மேற்கு அறை மற்றும் மேற்கு சுவர்.
3. ஏற்கெனவே உள்ள கட்டடத்தில் இருந்து நெடுவரிசைகள் மற்றும் சுவர் தூண்களை மீண்டும் பயன்படுத்துதல்.
4. மீட்கப்பட்ட அரபு மற்றும் பாரசீக கல்வெட்டுகளில் உள்ளவை.
5. அடித்தளத்தில் உள்ள சிற்ப எச்சங்கள்.
6. இந்து கோவில்’ போன்ற அமைப்பு.