பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார்.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. பீகாரில் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த லாலுவின் மகள், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நிதிஷ்குமாரை கடுமையாக சாடி பதிவிட்டார்.
இதனையடுத்து கூட்டணியில் முறித்துக்கொள்ள நிதிஷ்குமார் திட்டமிட்டார். இன்று காலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்த நிதிஷ்குமார், தமது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். இதனைத்தொடர்ந்து நிதிஷ்குமாருக்கு பாஜக ஆதரவு அளித்தது.
இதனையடுத்து பீகார் முதலமைச்சராக 9 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். ராஜ் பவனில் நடைபெற்ற விழாவில், பீகார் முதலமைச்சராக அவர் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா, உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள் இருவரும் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
243 பேர் கொண்ட பீகார் சட்டசபையில், ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து பாஜகவுக்கு 78 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.