மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றும் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. இதேபோல் பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
தொழில்நுட்ப துறையில் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தற்போதைய அறிவிப்பின் மூலம் மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்கின்றனர்.
ப்லிசர்ட் தலைவர் மைக் யபரா மற்றும் டிசைன் பிரிவின் மூத்த அலுவலர் ஆலென் ஆதெம் ஆகியோரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர். இதோடு ப்லிசர்ட் ஏற்கனவே அறிவித்து இருந்த கேம் ஒன்றும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இதேபோல் eBay நிறுவனம் சுமார் ஆயிரம் பேரை பனிநீக்கம் செய்கிறது. இது மொத்த ஊழியர்களில் 9 சதவீதம் ஆகும். அதேபோல் பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்கிறது.
உணவு தொழில்நுட்ப நிறுவனமான ஸ்விக்கி, பொதுத்துறைக்கு செல்ல தயாராகி வருகிறது. மறுசீரமைப்பு நடவடிக்கையில் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு இது இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கை ஆகும். இதற்கு முன் ஜனவரி 2023 இல் 380 ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்தது.