உதயநிதி வாழ்க என்று சேலம் மாநாட்டுக்கு நடந்த பேரணியில் வெட்கமே இல்லாமல் கோஷமிட்டுச் செல்கிறார் பொன் முடி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திருக்கோவிலூர் மண்ணில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
திருக்கோவிலூர் அடுத்துள்ள ஆதிச்சனூர் பகுதியில், 2500 ஆண்டுகள் பழமையான உயிர்நீத்தார்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய கல் படுக்கை கண்டறியப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவையே தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த ராஜராஜசோழனை ஈன்றெடுத்த, தாய் வானவன் மகாதேவியார் பிறந்த ஊர் இது.
சனாதன தர்மத்தை காக்கவும், தமிழர்களின் வீரம் -விவேகத்தை உலகறியச் செய்யவும் தோன்றிய ராஜராஜசோழனை திருவயிற்றில் தாங்கிய ராஜாமாதா பிறந்த மண் இது. மிக உயரமான 192 அடி ராஜகோபுரம் கொண்ட, 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் கோவில் அமைந்திருக்கும் புண்ணிய ஸ்தலம்.
சைவ சமயத்தில் முக்கியமான சுந்தர மூர்த்தி நாயனாரை சைவத்துக்கு சிவ பெருமான் ஆட்கொண்ட, புகழ்பெற்ற திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் ஆலயமும், இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது.
சைவ சித்தாந்த கோட்பாடு நூலான சிவஞான போதத்தை உலகுக்கு தந்த மெய்கண்டர் இந்த மண்ணில் பிறந்தவர். கம்பராமாயணம் எழுத கம்பருக்கு பெரும் உதவி செய்த சடையப்ப வள்ளல் இந்த மண்ணில் பிறந்தவர்.
இத்தகைய சிறப்பு அம்சங்கள் கொண்ட திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் பெயரில், பக்தர்கள் வழங்கிய நிலங்கள் தற்போது முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள், வீடுகளாகி விட்டது.
பல இடங்கள் பட்டா மாற்றம் செய்யப்பட்டு கைமாறி விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. இது தான் தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறையின் சாதனை.
விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இதுவரை 4,777 கோடி ரூபாய் நமது மத்திய அரசு செலவிட்டுள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையம் 24 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. 76,904 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 2,67,008 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 2,48,964 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,30,371 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,88,474 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 5,28,599 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், விழுப்புரம் மாவட்டத்திற்கு 5,104 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.
திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறையில்லாத அமைச்சர் செய்த சாதனைகள், பெண்களை ஓசி என்று திட்டியது, பட்டியல் மக்களை நீ SC தானே என்று பொதுமேடையில் அவமதித்தது, அப்படியே வாக்களித்து கிழிச்சுடீங்க என்று வாக்காளர்களை அசிங்கப்படுத்தியது, ஏ போயா என்று ஆளுநரை அவமரியாதையாகப் சட்டமன்றத்தில் பேசியது, யோவ் சும்மா உக்காருய்யா என்று எதிர்கட்சியினரை பார்த்து கத்தியது.
இவைதான் அவரின் பெருமை பேசும் சாதனைகள். ஊழல் வழக்கில் அமைச்சர் பதவியிழந்த பின்னர், உடல் நலம் சரியில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பொய் கூறி, சிறைக்குச் செல்வதை தள்ளி வைத்துவிட்டு, உதயநிதி வாழ்க என்று சேலம் மாநாட்டுக்கு நடந்த பேரணியில் வெட்கமே இல்லாமல் கோஷமிட்டுச் செல்கிறார்.
பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த அமலாக்கத் துறை சோதனையில், முறைகேடாக உரிமம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள், ₹81.7 லட்சம் ரொக்கம் மற்றும் ₹13 லட்சம் மதிப்புள்ள பிரிட்டிஷ் பவுண்டுகள், ₹41.9 கோடி வங்கி வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளன, இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன.
வெறும் ₹41.57 லட்சத்திற்கு ஒரு நிறுவனத்தை வாங்கியதாகக் கணக்கு காட்டி, பின்னர் 2022 ஆம் ஆண்டு, ₹100 கோடிக்கு விற்றதில் ஹவாலா மூலம் பெருமளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது தான் துறையில்லாத அமைச்சரான பொன்முடியின் லட்சணம்.
சாதாரண மூட்டை தூக்கும் தொழிலாளிக்குக் கூட குறைந்தபட்ச தகுதி எதிர்பார்க்கும் நாம், நம்மை ஆளும் அரசியல்வாதிகளிடம் ஏன் அந்தத் தகுதியை எதிர்பார்ப்பதில்லை. ஒரு குடும்பத்தில் பிறந்த தகுதியை மட்டுமே வைத்துக் கொண்டு, மக்கள் பணத்தைத் திருடி ஊழல் செய்து அவர்கள் குடும்பம் மட்டுமே நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்களே தவிர, தமிழக இளைஞர்களுக்கு மகளிர் மேம்பாடுக்கென வேலைவாய்ப்போ, புதிய திட்டங்களோ இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் கொண்டு வரவில்லை.
மாற்றி மாற்றி வாக்களித்து மக்கள் ஏமாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஒருவரை விட ஒருவர் அதிக ஊழல் செய்து, இறுதியில் பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்கள்தான்.
வரும் பாராளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான முதற்படி. ஊழலற்ற, நேர்மையான, மக்கள் நலன் சார்ந்த அரசியல் தமிழகத்திலும் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் மக்களிடம் உணர முடிகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால நல்லாட்சி, தமிழக மக்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், நேர்மையின் பக்கம் நின்று, நமது பிரதமர் மோடி, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை தமிழகமும் துணை நிற்கும் எனத் தெரிவித்தார்.