ஏடன் வளைகுடா பகுதியில் ஏவுகணைத் தாக்குதலில் தீப்பிடித்த பிரிட்டன் நாட்டின் எண்ணெய் கப்பலுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இனி சீனாவைக் கொண்டாடுவதை நிறுத்தி விட்டு, இந்தியாவை கொண்டாடுங்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஹிஸ்புல்லா, ஹௌதி போன்ற தீவிரவாத அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஆகவே, ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள், ஏடன் வளைகுடா, செங்கடல் போன்ற பகுதிகளில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற பிரிட்டன் நாட்டின் ‘மார்லின் லுவாண்டா’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தினர்.
இதையடுத்து, அக்கப்பலில் இருந்து உதவி கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பல் விரைந்து சென்று, அக்கப்பலில் இருந்த தீயை அணைத்ததோடு, அக்கப்பலில் இருந்த 22 இந்திய பணியாளர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் மீட்டது.
இந்த நிலையில், நமது கடற்படையின் இத்தகைய செயலுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் அர்பன் கூறுகையில், ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதியில் நெருக்கடிகளுக்கு இடையே சீனாவை விட இந்தியா பல மடங்கு பலம் வாய்ந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல, வரலாற்று ஆசிரியர் மார்ட்டின் சாயர்ப்ரே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்தியா தலைமை தாங்குகிறது. அந்நாட்டின் சக்தி எழுச்சி பெறுகிறது. இனி சீனாவைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், பத்திரிகையாளர் அபிஜித் அய்யர் மித்ரா வெளியிட்டிருக்கும் பதிவில், “அரபிக் கடலில் கப்பல் போக்குவரத்துக்கு இந்தியா பாதுகாப்பு அளித்து வருகிறது. ஜிபூட்டியில் தளத்தை வைத்திருக்கும் சீன அல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, ‘மார்லின் லுவாண்டா’ எண்ணெய் கப்பலுக்கு அளிக்கப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து நமது கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், “அவசர அழைப்பின்படி சம்பவ இடத்துக்குச் சென்ற ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பல், 6 மணி நேரம் போராடி கப்பலில் இருந்த தீயை அணைத்தது. மேலும், இக்கப்பலுக்கு உதவ, அமெரிக்கா மற்றும் பிரான்ஸும் முன்வந்தன. தொடர்ந்து பிராந்தியத்தில் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.