விழுப்புரத்தை வளர்ச்சியில் பின்தங்கியே வைத்திருப்பதுதான் தமிழக ஆட்சியாளர்களின் கொள்கையா? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை விழுப்புரம் மண்ணில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சோழர்களின் குல குருக்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தது விழுப்புரம் மண்ணில் தான். விழுப்புரத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் இருக்கிறார்கள்.
இங்கே செய்யப்படும் எடைக் குறைந்த மூக்குத்திகள், நாடு முழுவதும் பிரபலம். இவர்களைப் போன்ற கைவினைக் கலைஞர்கள் பயன்பெறத்தான், நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்துள்ளார். இதற்கு 13,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 3 லட்ச ரூபாய் வரை பிணையில்லாத கடன் வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களின் பங்கு 34%. ஆனால், விழுப்புரத்தின் பங்கு வெறும் 2.6% மட்டுமே. தமிழகத்தில் மனித வளர்ச்சி குறியீட்டில் கடைசியிலிருந்து நான்காவது இடத்தில் விழுப்புரம் இருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன சகோதரர்கள் அதிகம் வாழும் பகுதியான விழுப்புரத்தை, இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளாக விழுப்புரத்தை வளர்ச்சியில் பின்தங்கியே வைத்திருப்பதுதான் தமிழக ஆட்சியாளர்களின் கொள்கையா?
நேற்றைய தினம், திருச்சியில் விசிக கட்சி நடத்திய மாநாட்டில், வழக்கம் போல இஸ்ரேல், பாலஸ்தீனம், மணிப்பூர், இலங்கை என்று பிற நாடு, பிற மாநில பிரச்சினைகளையெல்லாம் பேசிவிட்டு, ஆளுநர் பதவியை ஒழிப்போம், நீட் தேர்வை ஒழிப்போம், GST வரியை எதிர்ப்போம் என்று தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் அண்ணன் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தார்.
தமிழக மக்களுக்காகப் பேசாமல், இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களால் என்ன பயன்? வேங்கைவயல் சம்பவம் நடந்து 14 மாதங்கள் ஆகியும், இன்று வரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. தமிழகத்தில் 37 மாவட்டங்களில் சாதிய ரீதியான வன்கொடுமைகள் பரவலாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை உட்கார வைத்து விட்டு, அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்காமல் அரசியல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் திருமாவளவன்.
ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று பாஜக 25 ஆண்டுகளாக சொல்லி வருகிறது. இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் திருமாவளவன். பாஜகவுக்கு முன்பே ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படாதிருக்கலாம்.
எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும், பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று கருதுகிறேன் என்று நெஞ்சுக்கு நீதி -இரண்டாம் பாகம், பக்கம் 273ல் கலைஞர் கருணாநிதி எழுதியுள்ளார். அவர் எழுதியதை அவரது மகனே படித்ததில்லை எனத் தெரிகிறது.
16வது நிதிக்குழுவில் நிதிப்பகிர்வை அதிகரிக்கவேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். திமுக இடம்பெற்ற காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு வழங்கியதை விட, 10% அதிகமாகத்தான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு வழங்குகிறது.
அது மட்டுமல்ல, மத்திய அரசின் நலத்திட்டங்கள் பட்டியல் சமுதாய சகோதர சகோதரிகளை சென்றடையவேண்டும் என்பதற்காக SCSP திட்டத்தில், கடந்த 2022-23ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 16,422 கோடி ரூபாய். இதில் சுமார் 10,446 கோடி ரூபாயை செலவிடாமல் திருப்பி அனுப்பியது திமுக அரசு. மத்திய அரசு கொடுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தாத திமுக அரசை எதிர்த்து ஏன் தீர்மானம் போடவில்லை.
மத்தியில் உள்ள மொத்த 76 அமைச்சர்களில் பட்டியல் மக்களுக்கு போதிய பிரதிநித்துவம் இல்லை என்று ஒரு தீர்மானம் கூறியிருக்கிறார். தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் அதில் வெறும் 3 பேர் தான் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். மத்திய அரசின் மொத்தம் 76 அமைச்சர்களில், 16 சதவீதம் அமைச்சர்கள், 12 பேர் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தமிழக அமைச்சரவையில் 10 சதவீதம் கூட இல்லை.
யாரை எதிர்த்து இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது கூட அண்ணன் திருமாவளவன் அவர்களுக்குத் தெரியவில்லை. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டு அமைச்சர்கள். ஒருவர் பொன்முடி. மற்றொருவர் செஞ்சி மஸ்தான். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அமைச்சர் பொன்முடி தற்போது துறையில்லாத அமைச்சராக இருக்கிறார்.
செஞ்சி மஸ்தான் உண்மையில் சாராயம் காய்ச்சுபவர் நலத்துறை அமைச்சராகத்தான் இருக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது மூன்று வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். இன்னும் இரண்டு வழக்குகளில் தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறார். அமலாக்கத்துறை சோதனையில் ₹41.9 கோடி வங்கி வைப்புத் தொகை மற்றும் ஒரு இந்தோனேசிய நிறுவனத்தை, வெறும் ₹41.57 லட்சத்திற்கு வாங்கியதாகக் கணக்கு காட்டி, பின்னர் 2022 ஆம் ஆண்டு, ₹100 கோடிக்கு விற்கப்பட்டதிலும், ஹவாலா மூலம் பெருமளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தல், நேர்மையான நல்லாட்சிக்கும், குடும்ப ஊழல் ஆட்சிக்கும் இடையேயான தேர்தல். ஏழை எளிய மக்களுக்கான பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கும், காங்கிரஸ், திமுக ஊழல் கட்சிகளுக்கும் இடையேயான தேர்தல்.
தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக, குடும்ப அரசியல் ஒழிய, நமது குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். பாரதப் பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.