தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பட்டதாரி இளைஞர்களை வேலைக்காகக் காத்திருக்க வைத்திருக்கிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
மத்திய அரசு நடத்தும் வருடாந்திர கல்வியறிவு குறித்த ஆய்வறிக்கையில் (Annual Status of Education Report), ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கிராமப்புற மாவட்டம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட மாவட்டம் பெரம்பலூர்.
பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பெரிய வேறுபாடு இல்லை. தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கட்டாயமாக வைத்திருக்கும் திமுக அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மூன்று மொழி பயில தடுக்கிறது.
எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் முன்னேறி விடக் கூடாது, அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைத்தால், திமுகவினரின் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விடும் என்பதற்காக, மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாமல், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க போகிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.
கலைஞர் எந்த ஆண்டில் ரயில் வராத பாதையில் தலையை வைத்து படுத்தார் என்பது போன்ற திமுக வரலாற்றை தெரிந்து கொண்டு நம் குழந்தைகள் எப்படி முன்னேற முடியும்?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புறவழிசாலைகளை விரிவுபடுத்த 220 கோடி ரூபாய் நமது மத்திய அரசு வழங்கியுள்ளது. பாரத பிரதமர் வழங்கிய 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
50,030 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,51,824 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 1,74,938 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 66,512 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,97,714 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,81,648 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி 512 கோடி ரூபாய் என மத்திய அரசு வழங்கியுள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் High Glory Footwear என்ற நிறுவனம், உளுந்தூர்பேட்டை சிப்காட் பகுதியில் 2,302 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்போவதாக திமுக கூறியது. இதன் மூலம், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் சொன்னார்கள்.
இந்த நிறுவனத்தின் சென்னை கோடம்பாக்கம் விலாசத்தில், அப்படி ஒரு நிறுவனமே இல்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட செய்தி தான் வந்ததே தவிர, உளுந்தூர்பேட்டையில் எந்த முதலீடும் வரவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்ததும், மூன்று லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு வேலை என்று கூறினார்கள். குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 3A, குரூப் 4, பொறியியல் தேர்வுகள் என அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகளைக் கூட வெளியிடாமல், சுமார் 30 லட்சம் பட்டதாரி இளைஞர்களை வேலைக்காகக் காத்திருக்க வைத்திருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்து 31 மாதங்களில் 1,55,000 பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு வேலை கொடுத்திருக்க வேண்டிய திமுக, இதுவரை கொடுத்தது 10,323 பேருக்கு மட்டுமே.
சென்னை பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் வேலை செய்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த பட்டியல் சமூக சகோதரிக்கு நடந்த கொடுமை, மொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது.
சாதி ரீதியாக துன்புறுத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது. அந்தச் சகோதரிக்காக பாஜக குரல் கொடுத்ததனால் மட்டும் தான் காவல்துறை சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இல்லை என்றால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருப்பார்கள்.
லஞ்சம், ஊழல், குடும்ப அரசியல், ஜாதி அரசியல், அராஜகம் என திமுக ஆட்சியில் தமிழக மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்கள் ஏராளம். தமிழகத்தில் இருந்து சென்ற திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமிழகத்திற்காக ஒன்றுமே செய்ததில்லை.
பொதுமக்களுக்கு, அவர்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பது கூடத் தெரியவில்லை. வரும் பாராளுமன்றத் தேர்தல் இதற்கெல்லாம் ஒரு முடிவுரை எழுதட்டும். மக்களுக்காக உழைக்கும், நேர்மையான பத்து ஆண்டு கால நல்லாட்சி வழங்கியிருக்கும் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும் துணை நிற்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து ஊழல் கட்சிகளுக்கு முடிவுரை எழுதத் தொடங்குவோம் எனத் தெரிவித்தார்.