மாணவர்கள் தங்களுடன் போட்டியிட வேண்டும், மற்றவர்களுடன் போட்டியிடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புது தில்லி பிரகதியில் உள்ள பாரத் மண்டபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் பரீக்ஷா பே சர்ச்சா 2024 நிகழ்ச்சியின் 7வது பதிப்பு இன்று நடைபெற்றது. பிரதமரின் உரையை இணையத்தில் கேட்க 2.56 கோடி மாணவர்கள், 14.93 லட்சம் ஆசிரியர்கள், 5.69 லட்சம் பெற்றோர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
வாழ்க்கையில் சவால்கள் இல்லாவிட்டால், வாழ்க்கை உற்சாகமற்றதாகவும், மனச்சோர்வடையாததாகவும் மாறும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டுகளை விசிட்டிங் கார்டாகக் கருதுகிறார்கள், இது நல்லதல்ல என்றார். மாணவர்கள் நமது எதிர்காலத்தை வடிவமைப்பார்கள்.
நெருக்கடியை கையாளும் கலையை மாணவர்கள் அவசரமின்றி படிப்படியாக கற்க வேண்டும்.
எந்த விதமான அழுத்தத்தையும் தாங்கும் திறன் உடைய குழந்தைகளை உருவாக்க வேண்டும். அழுத்தம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, அதைக் கையாள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்றார். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான பிணைப்பு பாடத்திட்டம், பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். மாணவர்களின் சவால்களை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சமச்சீர் உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை உடற்தகுதிக்கு மிகவும் முக்கியம் என்று கூறினார். ஆரோக்கியமான மனதுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்றார். சரியான உறக்கமும் மிக முக்கியம் என்றார்.
மாணவர்கள் தீர்க்கமாக செயல்படும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அதில் ஏதேனும் குழப்பம் இருந்தால் பேசி தீர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்றார். ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒருபோதும் ஒப்பிட கூடாது.
குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே நம்பிக்கை குறைபாடு இருக்கக் கூடாது என்றார். மாணவர்கள் முடிந்தவரை விடைகளை எழுத பயிற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நீங்கள் பயிற்சி செய்தால், பெரும்பாலான பரீட்சையில் மன அழுத்தம் நீங்கும் என்று கூறினார்.