கர்நாடகாவில் அனுமன் கொடியை அக்றற சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் அங்கு 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.
அயோத்தியில் குழந்தை ராமர் சிலை ஜனவரி 22ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பூஜை செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்த விழாவை உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் கடந்த வாரம் 108 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டு அதில் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் அந்த கொடியை அகற்றுமாறு பஞ்சாயத்து நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று கொடி ஏற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
கேரகோடு முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பாஜக மற்றும் ஜேடிஎஸ் சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.