ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி ‘சூரிய சப்தமி’யை முன்னிட்டு அனைத்து பள்ளிகளையும் ஒருங்கிணைத்து பிரம்மாண்ட சூரிய நமஸ்காரம் நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தான் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மதன் திலாவரின் வழிகாட்டுதல்படி கல்வி துறை இயக்குநர் ஆசிஷ் மோடி, அனைத்து பள்ளிகளிலும் காலை கூட்டங்களில் சூரிய நமஸ்காரம் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி 15 ஆம் தேதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். இதன் மூலம் புதிய உலக சாதனை படைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜஸ்தான் மாநிலம் முழுக்க அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் ஆகியோரால் ஒரே நேரத்தில் செய்யப்படும் இந்த சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியின் மூலம் உலக சாதனை படைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதலில் ஒருநாள் நிகழ்வு மட்டும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அரசு அனுமதி அளித்தால் உடல் நலனை சீராக்கும் சூரிய நமஸ்காரத்தை ஊக்குவிக்க தொடர்ச்சியான பயிற்சிகள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
முறையான பயிற்றுநர்கள் கொண்டு பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் செய்யும் முறைகளைக் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத மற்றும் ஆன்மிக பின்னணிக்கு அப்பால் சூரிய நமஸ்காரம் என்பது, உடல் நலன் சார்ந்து உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக உள்ளது.
உலக சாதனைக்கான ராஜஸ்தானின் முயற்சி மூலம் சூரிய நமஸ்காரம் மற்றும் யோகா குறித்தான விழிப்புணர்வு அதிகமானோரை சென்று சேரும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.