நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் உரையின்போது குறுக்கிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
84-வது அகில இந்திய தலைமை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் நிறைவுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஓம்பிர்லா, “அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின் கீழ் விதிகளை மறு ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க, அகில இந்திய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இந்த அட்டவணை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கையாள்கிறது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, ஏற்கெனவே உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிப்பாய்வு செய்யும். அதேபோல, சி.பி. ஜோஷியின் தலைமையில் அமைக்கப்பட்ட முந்தைய குழுவின் பரிந்துரைகளையும் மதிப்பாய்வு செய்யும்.
தேவைப்பட்டால், திருத்தங்கள் மற்றும் அரசாங்கத்திற்கான பரிந்துரைகளை நர்வேகர் குழுவும் பகிர்ந்து கொள்ளும். இந்த திருத்தங்கள் பொருத்தமானதாகக் காணப்பட்டால், அவை மீது நடவடிக்கை எடுக்கலாம்.
இது தவிர, மாநாட்டில் 5 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் திறம்பட செயல்படுவதற்கு விதிகளை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துகிறது. இந்த தீர்மானம் நடவடிக்கைகளில் ஒழுக்கம் மற்றும் அலங்காரத்தை மேம்படுத்த உதவும்.
2-வது தீர்மானம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறனை வளர்ப்பதற்கு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிக்கிறது.
3-வது தீர்மானம், செயல்திறன், வெளிப்படைத்தன்மை, உற்பத்தித்திறன் மற்றும் குடிமக்களுடன் ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பின்பற்ற சட்டமியற்றும் அமைப்புகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.
4-வது தீர்மானம் சட்டமன்றக் குழுக்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை ஆராய நிறைவேற்றப்பட்டுள்ளது. 5-வது மற்றும் கடைசித் தீர்மானத்தின் கீழ், சட்டமன்றங்களுக்கு இடையே வளம் மற்றும் அனுபவப் பகிர்வுக்காக ‘ஒரே தேசம் ஒரே சட்டமன்றத் தளத்தை’ செயல்படுத்துவதற்கான செயல்திறமிக்க நடவடிக்கைகளை எடுக்க அகில இந்திய தலைமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.