நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 31-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பழைய அரசாங்கம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கமாக இருக்கிறது. புதிய அரசு அமைந்த பிறகு, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அந்த வகையில், மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. இதை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
அன்றையதினம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 6-வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், கூட்டத் தொடர் 31-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளுக்கு வலியுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.