அமெரிக்காவில் வீடற்ற நபருக்கு இரக்கப்பட்டு உணவு மற்றும் ஆடைகளை வழங்கிய இந்தியர் சுத்தியலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவில் கடுமையான வீட்டு வாடகை உயர்வு காரணமாக, 75,000 டாலர் வரை மட்டுமே சம்பாதிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதேசமயம், இந்த வருமானம்கூட இல்லாதவர்கள், வசிக்க இடமின்றி சாலைகளின் ஓரங்களிலும், சுரங்கப் பாதைகளிலும் வசிக்கின்றனர்.
அமெரிக்காவில் 9 மாதங்களுக்கு கடும் குளிர்தான் நிலவும். ஆகவே, குளிர் ஒருபுறம், மறுபுறம் உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட எவ்வித அத்தியாவசியத் தேவைகளும் கிடைக்காமல் வசிப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு சிரமப்படுபவர்களுக்கு அமெரிக்காவுக்குச் சென்று பணிபுரிந்து வரும் இந்தியர்களில் பலர் உணவு மற்றும் போர்வை உள்ளிட்டவைகளை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவின் ஜியார்ஜியா மாநிலம் டிகால்ப் கவுன்டி பகுதியின் தென்கிழக்கே உள்ள நகரம் லிதோனியா. இப்பகுதியில் உள்ள செவ்ரான் ஃபுட் மார்ட் எனும் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்து வந்தவர் இந்தியரான 25 வயது விவேக் சைனி.
பி.டெக். பட்டப்படிப்பை முடித்த விவேக் சைனி, கடந்த 2 வருடங்களுக்கு முன்புதான் அமெரிக்காவுக்குச் சென்றார். சில மாதங்களுக்கு முன்பு வணிக நிர்வாகத்தில் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த உணவகத்துக்கு ஜூலியன் ஃபால்க்னர் என்கிற வீடற்ற ஒருவர் உணவும், குடிநீரும் கேட்டு வந்திருக்கிறார். எனவே, விவேக்கும், உணவக பணியாளர்களும் இரக்கப்பட்டு அவருக்கு உணவு, சிப்ஸ், மற்றும் கோக் வழங்கி இருக்கிறார்கள்.
அப்போது, குளிருக்கு போர்வை கேட்டிருக்கிறார் ஜூலியன். அதற்கு அவர்கள் தங்களிடம் இருந்த உடைகளை வழங்கி இருக்கிறார். இதனால், ஜூலியன் அடிக்கடி அந்த உணவகத்துக்கு வருவதும் போவதுமாக இருந்திருக்கிறார். விவேக் உள்ளிட்டோர் தங்களால் இயன்ற உதவிகளை தினமும் செய்து வந்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், ஜூவியன் உணவக வாசலையே தன்னுடைய வசிப்பிடமாக்கினார். இதைக்கண்ட, விவேக் வேறு எங்காவது சென்று தங்குமாறு கூறியிருக்கிறார். இதற்கு ஜூலியன் மறுப்புத் தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும், கடை வாசலில் இருந்து வெளியேறாவிட்டால் போலீஸை அழைக்க வேண்டி இருக்கும் என்று விவேக் எச்சரித்தார். இது ஜூலியனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, வேலை நேரம் முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு விவேக் வெளியே வந்தார்.
அப்போது, திடீரென அவரை மறித்த ஜூலியன், கையில் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் விவேக்கின் முகத்தில் சரமாரியாகத் தாக்கினார். ஜூலியன் சுமார் 50 முறை சுத்தியலால் தாக்கியதால், நிலைதடுமாறி கீழே விழுந்த விவேக், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற பணியாளர்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார் அங்கு நின்று கொண்டிருந்த ஜூலியனை கைது செய்து, அவரிடம் இருந்து சுத்தியலை தவிர மேலும் 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஜூலியனை சிறையில் அடைத்த போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.