விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்ற அஜித் அங்கே எடுத்த ஹாலிவுட் ஹீரோ போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகர் ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசன்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.
ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வந்த நீரவ்ஷா படத்திலிருந்து வெளியேறி ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டார்.
இதன் காரணமாக, அஜித்துக்கும், மகிழ் திருமேனிக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் அவற்றை தள்ளி வைத்துவிட்டு படப்பிடிப்பை துரிதமாக நடத்தி வருகிறார்களாம்.
அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அஜர்பைஜானில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் ஷூட்டிங்கை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் வேறு இடத்தில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளார்களாம். அதுவரை அஜர்பைஜான் நாட்டில் ஜாலியாக ரிலாக்ஸ் பண்ணி வருகிறது படக்குழு.
நடிகர் அஜித்தும், விடாமுயற்சி படத்தின் வில்லனான ஆரவ்வும் அஜர்பைஜானில் ஜாலியாக வாக்கிங் சென்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
இதுதவிர நடிகர் அஜித் அஜர்பைஜான் சாலைகளில் உலா வந்தபோது எடுத்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் அஜித் புது லுக்கில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஹாலிவுட் ஹீரோ போல இருப்பதாக வர்ணித்து வருகின்றனர்.
விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் படக்குழு தாமதப் படுத்தினாலும், அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.