நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதனையடுத்து இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
17-வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடரான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல்நாளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட். இதன் மூலம் தனது முன்னோடிகளான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பி சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா உட்பட, தொடர்ந்து ஐந்து பட்ஜெட்களை தாக்கல் செய்த சாதனைகளை அவர் முறியடிக்க உள்ளார். பிப்ரவரி 9-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து நாடாளுமன்ற நூலக அறையில் இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்து ஆதரவு அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சி தலைவர்களை கேட்டுக்கொண்டார்.