இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீரர்களான ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின் போது ஜடேஜாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது.
அதேபோல் கே.எல். ராகுலுக்கு தசைநாரில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் 2-வது போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.
இருவரின் காயத்தன்மையின் முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் பதிலாக மூன்று வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர். அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர்.
இவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான், சவுரப் குமார், தமிழக வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இருவரும் விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இருப்பினும் இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளுக்கு இவர்கள் இருவரும் அணிக்கு திரும்பினால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்று நம்பப்படுகிறது.